Friday, March 19, 2004

உனக்கு அல்வா, எனக்கு அவள் - அத்தியாயம் 2B

அந்த ஆசிரியத் திட்டம் (மாஸ்டர் பிளான்) என்ன தெரியுமா..?? எனக்கும் என் நண்பனுக்கும் (எதிரிக்கும்??) நடந்த கீழ்க்காணும் உரையாடலின் முடிவில் உங்களுக்கே புரியும் -

"இதோ பாருடா.. ஏதோ நம்ம நட்புக்குப் போதாத காலம்.. இப்படி ஒரே பொண்ணை.."

"ஒரே அழகான பொண்ணை.."

"ஆமா.. ஒரே அழகான பொண்ணை நாம் ரெண்டு பேரும் பார்த்துக் காதலிக்கும் படியா ஆகிடுச்சு.. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி தான் இருக்கு.."

"ஒரே அழகான வழியா..??"

"இல்லை இல்லை.. சுமாரான வழி தான்.. என் அறிவுக்கு எட்டினது தானே.. அதாவது நமக்குள்ள ஒரு சின்ன போட்டி.. அதில ஜெயிக்கிறவனுக்கு அவள்.. (ஜெயிக்காதவனுக்கு அல்வா..)"

[யோவ் எழுத்தாளர் மாங்கா..!! தலைப்பைத்தான் போன பாகத்திலயே establish பண்ணியாச்சே.. தலைப்புச் செய்தி மாதிரி திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டு.. கதைக்கு வாய்யா சீக்கிரம்..]

"என்ன போட்டி..??"

"உனக்கே நல்லாத் தெரியும் நாம ரெண்டு பேரும் சுஜாதா கதை ரசிகர்கள்-னு.."

"எனக்கே தெரியாம நான் ஒருத்தருக்கு ரசிகராக முடியுமா என்ன??"

"டேய்.. குறுக்க பேசாதே.. அதனால, நாம ரெண்டு பேரும் அவரோட கணேஷ்-வஸந்த் கிட்டே போகப் போறோம்.. அவங்க கிட்டே வர்ற ஒரு சுமாரான கேஸை நாம எடுத்துத் தீர்த்து வைப்போம்.."

"அதில ஜெயிக்கறவனுக்கு அவள்.. ஜெயிக்காதவனுக்கு அல்வா.. அப்படித்தானே..??"

"ஆமா.."

"வேற ஏதாவது வழி இருக்கா..??"

"உனக்கு தோணுச்சுன்னா சொல்லு.. ஆனா இந்தக் கதை எழுதறவர் ஏற்கெனவே கணேஷ் வஸந்த் வருவாங்க-ன்னு சொல்லிட்டாரு,. அதனால நீ ஏதாவது சொன்னாலும் நான் சொல்ற வழி தான் பெஸ்ட்-டுனு கடைசியில தீர்ப்பாயிடும்.."

"அப்படின்னா சரி.. விட்டுரலாம்.. நீ சொல்ற வழியே ஓக்கே தான்..!!"

"சரி, அப்படின்னா வா.. இப்பவே போய் அவங்களைப் பார்த்துடலாம்.."

********


(சிறிய இடைக்குறிப்பு: கதையோட்டத்திற்கு உதவி செய்யும் விதமாக கதைமாந்தர்களுக்குப் பெயர் சூட்ட வேண்டியது அவசியமாகிறது.. என் பெயர் சூர்யா, என் நண்பன் பெயர் சரவணன். பெயர்க் காரணங்கள் இந்தப் பாகத்தின் முடிவில் தன்னாலே உங்களுக்கு விளங்கும்..!!)

********


ரெஸ்டாரண்ட்டில், கணேஷ¤ம் வஸந்தும் அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த எங்களை சற்று வித்தியாசமாகப் பார்த்தனர்.. (கேவலமாகப் பார்த்தனர் அப்படிங்கறதுக்கு அது substitute, தெரியுமில்லை??)

கணேஷ் தான் முதலில் சுதாரித்து, "இப்படியெல்லாம் புதுமையான கோரிக்கை வரும்-னு நான் என் நீண்ட அனுபவத்தில நினைச்சே பார்த்ததில்லை.. வஸந்த்.. நீ என்னடா சொல்றே?? சுமாரான கேஸ் ஒண்ணு பார்த்து இவங்களுக்குத் தள்ளி விட்டுடலாம்-ங்கறியா??"என்றான்..

வஸந்த் சின்ன முணுமுணுப்புடன், "நம்ம கிட்டே வர்றது எல்லாமே சுமாரான கேஸ் தான்.. ஏதோ நம்ம ஆளு அதில கொஞ்சம் விஞ்ஞானம், மர்மம்-னு கலந்து கட்டி பில்ட்-அப் குடுத்து பெரிய கேஸாக்கிடறாரு.. நம்ம பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.."என்றான்..

"என்னடா முணுமுணுக்கிறே..??"

"ஒண்ணுமில்லை பாஸ்.. அந்த வெயிட்டர் பொண்ணு பத்தி ஒரு அந்தாதி சொல்லிப் பழகினேன்.. இவங்களுக்கு உதவி பண்ணுவோம் பாஸ்.. போற காலத்துக்கு கொஞ்சம் புண்ணியம் தேடின மாதிரி இருக்கும்.."

"நீ எப்போலேர்ந்து டா போற காலம் பத்தியெல்லாம் கவலைப்பட ஆரம்பிச்சே..??"

"நேத்து பட்டினத்தார் பாடல்கள் கொஞ்சம் படிச்சேன்.. அதில இருந்து வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்-னு ஒரே •பீலிங்கா இருக்கு பாஸ்.. பயப்படாதீங்க.. ஹெரால்டு ராபின்ஸ் ஒண்ணு எடுத்து வச்சிருக்கேன்.. படிச்சு முடிச்சதும் •பார்முக்கு வந்துடுவேன்.. நான் இவங்களைக் கூட்டிட்டு ஆ•பீஸ் போறேன்.. நீங்க கோர்ட்டுக்குப் போய் அந்த அட்ஜோர்ன்மெண்ட் முடிச்சுட்டு வாங்க.."

"ரைட்டோ.."

காரில் போகும்போது பொறுக்க முடியாமல்,

"வஸந்த், அந்த மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்.." என்று நான் ஆரம்பித்ததும் வஸந்த் புன்னகைத்து,

"எங்க கதையில வர்ற மெயின் காரக்டருக்கே நாங்க சொல்றதில்லை.. திடீர்-னு வந்த உங்களுக்கு எப்படிங்க..?? இந்தக் கதை முடியும்போது பார்க்கலாம்.. பாஸ் கிட்டே சொல்லிப் பார்க்கிறேன்.." என்றான்..

அலுவலகம் சென்று சேரும் போதே,

"மிஸ்டர் சூர்யா அண்ட் சரவணன், உங்களுக்காகவே ஒரு நல்ல கேஸ் இருக்குங்க.. சின்ன விஷயம் தான்.. நல்ல சுவாரஸ்யமான கேஸ்.. சொல்றேன்.. வாங்க.." என்று சொல்லியபடி வஸந்த் உள்ளே அழைத்துப் போனான்..

அலமாரியில் தேடி ஒரு •பைல் எடுத்து எங்கள் முன் வைத்து, "பாருங்க.." என்றான்..

•பைலைத் திறந்தோம்.. அதனுள்ளிருந்து ஒரு •போட்டோ வழுக்கியபடி வெளியே வந்து விழுந்தது.. அதில் சிரித்துக் கொண்டிருந்த பெண், நாங்கள் கடற்கரையில் பார்த்துக் காதலிக்கத் துவங்கிய அதே பெண்..!!

"பொண்ணு வடநாட்டுக்காரி, பேரு ஜோதிகா.."

(தொடரும்..)