நிலவைத் தேடி - அத்தியாயம் 1
ஷங்கரின் கல்லூரி நோக்கிய கார்ப் பயணம், மற்ற நாட்களைப் போல் அன்று சுகமானதாய் இருக்கவில்லை. வழக்கமாய், பரபரப்புச் சுழலில் சிக்கிக் கொள்ளாத காலை வேளையில் மரங்களடர்ந்த சில சென்னை நகரச் சாலைகளின் வழியே காரோட்டிக் கொன்டே செல்லும் போது ஷங்கரின் மனம், விதவிதமான பூக்கள், பறவைகளின் பள்ளியெழுச்சி கீதங்கள், சுகமான காற்று என்று இப்படியான சில ரம்மியமான அழகுகளை ரசித்துக் கொண்டிருக்கும். அன்றும் இவையெல்லாம் குறைவர இருந்த போதும், அவனால் ரசிக்க முடியவில்லை. சென்னை நகர் குறித்த அனுபவசாலிகள், இதற்குக் காரணம் தொலைபேசி/ மின்சாரம்/ மெட்ரோ வாட்டர் இலாகாவினர், கண்போன போக்கில் தோண்டி வைத்து விட்டுப் போயிருக்கும் குழிகள் தாம் என்று ஒரு முடிவுக்கு வரக் கூடும். ஆனால், நமது கதையில் அது காரணம் அல்ல. ஷங்கரின் சலன மனதுக்குக் காரணம், அவனது சட்டைப் பாக்கெட்டில் ஒரு கடித வடிவில் இருந்தது.
நேற்று மாலை அந்தக் கடிதத்தைப் படித்ததிலிருந்தே அவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. இது வரை நூறு முறையாவது அந்தக் கடிதத்தைப் படித்திருப்பான். இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. ஜென்னியிடம் கடிததைக் காட்டி அவள் சொல்வதைக் கேட்கும் வரை அவனுக்கு எதுவும் ஓடாது. 'நேற்றே சொல்லியிருக்க வேண்டும் அவளிடம்.. ஏதோ கல்யாண ரிஸப்ஷனுக்குப் போனவள் இரவில் தான் வீடு திரும்பியிருக்கிறாள்.. அந்த நேரத்தில் அவளை வீட்டுக்குக் கூப்பிட்டோ, அல்லது அவள் வீட்டுக்குப் போயோ தொந்தரவு செய்ய வேண்டாமென்று விட்டு விட்டேன். இரவெல்லாம் துக்கமில்லாமல் புரண்டு, கவலைப் பட்டு.. மரண அவஸ்தை.. ஜென்னியிடம் சொல்லிவிட்டால் போதும், பிறகு அவள் பார்த்துக் கொள்வாள்..!'
ஷங்கரின் பல கவலைகளுக்கு இது வரை இது தான் தீர்வாக இருந்திருக்கிறது. 'ஜென்னியிடம் சொன்னால் போதும், பிறகு அவள் பார்த்துக் கொள்வாள்..' இரண்டு பேரும் அத்தனை நெருங்கிய நண்பர்கள். ஷங்கரின் தந்தையும், ஜென்னியின் தந்தையும் கல்லூரியில் ஒன்றாகப் படித்து, சுயமாகத் தொழில் தொடங்கி, இன்று நாட்டின் பிரபலமான நிறுவனமாக முன்னேற்றியிருப்பவர்கள். வாரிசுகளின் நட்பிலும் எந்தக் குறையும் இருக்கவில்லை.
ஷங்கர் பிறந்து ஆறு மாதம் கழித்துப் பிறந்தவள் ஜென்னி. பிறந்ததிலிருந்தே இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, பள்ளி - கல்லூரி சென்று, நெருங்கிய நண்பர்களாய் இருந்து வருபவர்கள். இருவருக்கும் கருத்து வேற்றுமை என்பது, தங்கள் தந்தைமாரின் கம்பெனிக்கு யார் வருங்காலத்தில் முதலில் CEO ஆகப் போவது என்பதில் மட்டும் தான்.
"நான் உன்னை விட ஆறு மாசம் பெரியவன் ஜென்னி.. அதனால நான் தான் நியாயமாப் பார்த்தா முதல்ல CEO ஆகணும்..!!" என்பான் ஷங்கர். ஜென்னி கோபத்துடன் அவன் தலையில் தட்டி, "ஆறு மாசமெல்லாம் ஒண்ணும் கிடையாது. அஞ்சு மாசமும் 18 நாளும்.. அதாவது 170 நாள்.. 4080 மணி நேரம்.. 244800 நிமிஷம்.. 14688000 விநாடி.. அவ்வளவு தான்.. வந்துட்டாரு பெரிசா பேசறதுக்கு..!!" என்பாள்.. பள்ளியில், 'Mathematics Scholar' என்ற விருதை ஜென்னிக்கு சும்மா கொடுக்கவில்லையாக்கும், ஆமாம்.
கடைசியில் ஷங்கரின் அம்மா தான் பிரச்சினைக்கு ஒரு சுமுகத் தீர்வு அளிக்க வேண்டியிருந்தது. "பாருங்க கண்ணுங்களா, எப்படியும் கம்பெனியில் சேர்றதுக்கு முன்னால ரெண்டு பேரும் ப்ளஸ்2, எஞ்சினியரிங், எம்.பி.ஏ. மூணும் படிக்கப் போறீங்க.. யார் மத்தவங்களை விட மூணுல ரென்டுல அதிகமா மார்க் எடுக்கறாங்களோ அவங்க CEO ஆகிட வேண்டியது தான்..!!" தீர்வு ரொம்ப நியாயமாகவும், போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதாகவும் இருந்ததால் இரண்டு பேரும் ஏற்றுக் கொண்டனர். தற்போதைய நிலையில், ப்ளஸ்2-வில் ஷங்கரை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் எடுத்து ஜென்னி 1-0 என்று முன்னணியில் இருந்தாள். அதை வைத்தும் அவனை அவ்வப்போது நக்கலடிக்க அவள் தவறுவதில்லை. "டேய்! ரொம்பக் கவலைப்படாதே, எஞ்சினியரிங்-ல நான் உனக்காக விட்டுக் கொடுத்துடுறேன். என்ன இருந்தாலும் நீ என்னோட best friend. நீ 3-0 ன்னு எல்லாம் தோத்துப் போய் அசிங்கப் பட நான் விட்டுட மாட்டேன். அதுவுமில்லாம எஞ்சினியரிங்-லயே விஷயத்தைத் தீர்த்துட்டா அப்புறம் எம்.பி.ஏ-வில சுவாரஸ்யமே இருக்காது..!!"
ஷங்கர் முகம் சுளித்து அவளை முறைத்துவிட்டுப் போவான். இருந்தாலும், இத்தகைய செல்லமான ஓட்டுதல்களின் மூலம் இருவருக்கும் இடையிலான ஒட்டுதல் அதிகமானது என்பதே உண்மை. கல்லூரியில் கூட இந்த மூன்றாண்டுகளில் சக மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு 'இரயில்வே டிராக்' என்று பேர் - எப்போதும் சேர்ந்தே இருந்து ஒரே பாதையில் போவதால்..!
அந்த ஜென்னியிடம் தான் கடிதம் ஒன்றைக் காட்ட வேன்டுமென்று வேறு எதிலும் சிந்தனையைச் செலுத்த முடியாமல் விரைந்து போய்க் கொன்டிருந்தான் ஷங்கர். GST சாலையில் நுழைந்து ஒரு சிக்னலில் அவன் காத்திருக்கும் இந்த நேரத்தில் அவனைக் கொஞ்சம் வர்ணித்து முடித்து விடலாமா? Harry Potter போல் எப்போதும் கலைந்தே கிடக்கும் தலைமுடிக்குச் சொந்தக்காரன். அழகான முகம். அதில் அவ்வப்போது டிஸைன் மாறும் மீசை. [தற்போது 'சாமி' பாணியில் இருக்கிறது. கூடிய சீக்கிரம் 'விருமாண்டி'-க்கு மாறலாமா என்று ஒரு யோசனை..] எப்போதும் பரபரப்பாக அங்குமிங்கும் அலைபாயும் கண்கள். உட்கார்ந்திருக்கும் நிலையிலேயே கூட இயல்பான உயரமும், இயல்பான உடல்வாகும் இருப்பதை ஊகிக்க முடியும். அணிந்திருந்த சட்டையும் ஜீன்ஸும் அவனது நிறத்துக்குப் பொருத்தமாய் இருந்தன. அப்படியொரு handsome combination-ஆக இருந்தான் ஷங்கர். அதனால் தான் அவனது சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் அந்தக் கடிதம் வந்திருக்குமோ என்று கூட அவன் சந்தேகப் பட்டான். ஏனென்றால் அது ஒரு காதல் கடிதம்.
(தொடரும்..)
