Tuesday, February 24, 2004

உனக்கு அல்வா, எனக்கு அவள் - அத்தியாயம் 1

ரு ஊரில் இரண்டு அத்தியந்த நண்பர்கள் இருந்தார்கள்.. Third person singular-ல் "ஒரு ஊரில்.."என்ற வார்த்தைகளோடு கதையை ஆரம்பிக்க வேண்டுமே என்று அப்படிச் சொன்னேன்.. தன்னிலைக்கே வந்து விடுகிறேன்.. அந்த இரண்டு அத்தியந்த நண்பர்கள் நானும் என் நண்பனும் தான்.. (இலக்கணம் தெரிந்தவர்கள், உயிரெழுத்துக்கு முன்னால் "ஒரு"வரக்கூடாது, "ஓர்"தான் வரவேண்டும் என்று இந்நேரம் சண்டைக்கு வந்திருப்பார்கள்.. உங்களுக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகிறது..) அத்தியந்தமென்றால் அப்படி ஒரு அத்தியந்தம்.. நான் கடலை சாப்பிட்டு அவன் மிட்டாய் சாப்பிட்டால் நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து கடலை மிட்டாய் சாப்பிட்டதாய் ஆகி விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு பொன்மாலைப் பொழுதில் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தோம்.. கடற்காற்று மிக ரம்மியமான சூழலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.. பொன்மாலைப் பொழுது, கடற்கரை, காற்று, ரம்மியமான சூழல் எல்லாம் வந்த பிறகு கதையில் ஒரு அழகான பெண் வராமல் இருந்தால் எப்படி?? வந்தாள்..

அழகு என்றால் அப்படி ஒரு அழகு.. சங்க காலப் புலவர் இருந்தால், "உன் கன்னத்திலிருந்து கொஞ்சம் சதையைப் பிய்த்து எடுத்துத்தான் நிலவு செய்தார்கள்.."என்று கடினமான தமிழில் ஒரு பாடல் இயற்றியிருப்பார்.. அண்மைக்காலத் தமிழ் சினிமாப் பாடலாசிரியர் என்றால், "காதல் அரக்கியே.. கத்தி எடுத்து இதயம் குத்தி என்னைக் கணக்குப் பண்ணும் ரத்தக் குடிகாரியே..!!"என்று போற்றிப் பாடியிருப்பார்.. (ரத்தக் குடிகாரி என்றால் vampire)

இப்படி அழகாக இருக்கும் அந்தப் பெண் எங்களைக் கடந்து போனாள். எங்கள் கண்கள் சந்தித்தன.. கண்டதும் காதல் கொண்டோம் நாங்கள்..

இங்கே "நாங்கள்"என்று நான் சொல்வதை நீங்கள் தப்பாகப் புரிந்து கொள்ளக் கூடாது.. நாங்கள் என்பது இங்கே நானும் அந்தப் பெண்ணும் அல்ல. நாங்கள் என்பது என்னவென்றால், நானும் என் நண்பனும் சேர்ந்து அந்தப் பெண் மேல் காதல் கொண்டு விட்டோம்.

(சரி.. ஏ.சி. அறையில் இருந்து இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் அதன் குளுமையை கொஞ்சம் அதிகப் படுத்திக் கொள்ளுங்கள்.. ஏனென்றால் கதை இனிமேல் தான் சூடு பிடிக்கப் போகிறது..)

ஆனால் காமெடி பாருங்கள், நாங்கள் இருவரும் அந்தப் பெண்ணையே காதலிப்பது எங்கள் இருவருக்கும் அப்போது தெரியவில்லை.. கொஞ்ச நாள் காதல் போதையில் இருவரும் திளைத்தோம்.. 'யார், என்ன விவரம்' என்று சொல்லாமல், (தெரிந்தால் தானே சொல்லுவதற்கு!!) "நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்"என்று மட்டும் நண்பனிடம் சொல்ல, அவனும் அதையே வழிமொழிந்தான்.. அப்போதாவது எங்களுக்கு உறைத்ததா..? "அடடா, ரெண்டு பேருக்கும் காதல் வாய்ப்பது கூட ஒரே நேரத்திலா?? இருந்தாலும் இவ்வளவு அத்தியந்த நண்பர்களாய் நாம் இருக்கக் கூடாது.."என்று கொஞ்சம் மகிழ்ச்சி வேறு..

மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்க்க நேர்ந்தால் அவளோடு பேசுவதற்கும் முன்பாக நண்பனிடம் அவளைக் காண்பிக்க வேண்டும் என்று ஒப்பந்தமெல்லாம் போட்டுக் கொண்டோம்..

மறுபடி ஒரு பொன்மாலைப் பொழுதில், கடற்கரையில், காற்று வீசும் நேரத்தில் அவளைப் பார்த்தோம்.. இருவரும் ஒரே நேரத்தில், கையை நீட்டி, "அதோ பாரடா.. அவள் தான் நான் காதலிக்கும் பெண்.."என்று சொல்ல நினைத்து, "அதோ"என்று ஆரம்பிக்கும் போதே பூனை பையை விட்டு வெளியேறிவிட்டதனால் கையை மடக்கிக் கொண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்.. யுகம் யுகமாய்ப் பார்த்துக் கொண்டே நின்றோம் என்று எழுத ஆசை தான்.. ஆனால் அதற்குள் செத்துப் போய் விடுவோம் என்பதால் இரண்டு நிமிடங்களுக்குள் பார்வையை முடித்துக் கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கத் தொடங்கினோம்..

இருவரின் காதலில் ஒருவரின் காதல் மட்டுமே அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்க முடியும் என்று knock-out stage வந்து விட்டதால் அதனை முடிவு செய்யத் தீர்மானித்தோம்..

"இருவரின் காதலில் என் காதல் தான் உயர்ந்தது, ஏனென்றால் நான் உன்னை விட உயரமானவன்.. நானும் அவளும் சேரும் போது கிடைக்கும் கூட்டு உயரம், நீயும் அவளும் சேரும்போது கிடைக்கும் கூட்டு உயரத்தை விடவும் அதிகம்.."என்று என் நண்பன் கேணத்தனமாக லாஜிக் பேசத் தொடங்கியதால் எனக்குக் கோபம் வந்தது.. ஆண்டவன் என்னைக் குண்டாகப் படைத்ததற்கு முதல் முறையாய் மகிழ்ந்து, "உயர்வான காதலை விட கனமான காதல் தான் முக்கியம்.. நானும் அவளும் சேரும் போது கிடைக்கும் கூட்டு எடை தான் அதிகம்.. கூட்டுத் தொகைக் கணக்கு உனக்குப் பிடிக்காதென்றால் ஆவரேஜ் வேண்டுமானாலும் பார்க்கலாம்.."என்று என் பங்குக்கு ஒரு அஸ்திரம் போட்டு வைத்தேன்..

எங்கள் வாதப் பிரதிவாதங்கள் இதே அளவில் மேலும் தொடர்ந்ததால், அதையெல்லாம் இங்கு வெளியிட்டு உங்களைக் கண்கலங்க வைக்க நான் விரும்பவில்லை.. சுமுகமான தீர்வு ஏதும் எட்டப்படவில்லை என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதுமானது.

பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு என்று ரொம்ப யோசித்தோம்.. பகுத்தறிவுக் குட்டையில் நாங்கள் இருவருமே ரொம்ப ஊறிப்போனவர்கள் என்பதால் கோவிலில் சாமியின் முன்னால் பூப்போட்டுப் பார்பது போன்ற எளிய தீர்வுகளை நாங்கள் விரும்பவில்லை.. பண்டைய சோழர் காலத்துத் தமிழர்களின் குடவோலைத் திட்டம் ரொம்பப் பழையது என்று ஒதுக்கினோம் (digital யுகத்து இளைஞர்கள் அல்லவா??) ஜல்லிக்கட்டில் காளையை அடக்கலாமா என்று கூட பரிசீலித்துப் பார்த்தோம்.. ஜல்லிக்கட்டின் முடிவில் அவளுடன் இருக்க காளை மட்டுமே மிச்சமாயிருக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதால் அதையும் கைவிட்டோம்..

இப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் என் மூளையில் அந்த மாஸ்டர் பிளான் உதித்தது.. அவனுக்கு அல்வாவும் எனக்கு அவளும் கிடைக்கும் படியான ஒரு திட்டம்.. (அப்பாடி, டைட்டிலை உள்ளே நுழைச்சாச்சு..)

என்ன திட்டம்-னு தானே கேட்கறீங்க..?? அடுத்த பாகத்தில் உங்களுக்குத் தெரிய வரும்.. (யோசிக்க கொஞ்சம் டைம் கொடுங்கப்பா..)

(தொடரும்..)